பௌத்தமும் தமிழும்
Creators
Description
ஒரு காலத்தில் பௌத்தமதம் தமிழ் நாட்டில் சிறப்புற்றிருந்தது. ஏறக்குறைய கி. மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி. பி. பத்தாம் நூற்றாண்டு வரையில் இந்த மதம் தமிழ் நாட்டில் உயர் நிலை பெற்றிருந்தது. பிற்காலத்தில், பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர், இந்த மதம் மறையத் தொடங்கி, இப்போது முழுவதும் தமிழ் நாட்டில் மறைந்துவிட்டது. இப்போதைய தமிழர், ஒரு காலத்தில் பௌத்த மதம் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்ததென்பதை முற்றும் மறந்துவிட்டனர்; அது இவர்களுக்குப் பழங்கதையாய், கனவாய் மறைந்துவிட்டது.
எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர், பல நூற்றாண்டாகத் தமிழகத்தில் பரவியிருந்த பௌத்த மதம், தமிழ் மொழியிலும் தன் செல்வாக்கைச் செலுத்தியிருக்க வேண்டுமன்றோ? பௌத்தர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகள், அல்லது உதவிகள் யாவை? பௌத்தர் தமிழ் மொழியில் இயற்றிய நூல்கள் எவை? அவற்றின் வரலாறு என்ன? இவற்றை அறியக் கருதி யாம் செய்த ஆராய்ச்சியின் பயனே இந்நூலாகும். பௌத்தர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டினை மட்டும் ஆராய்வதே எமது முதல் நோக்கமாயிருந்தது. பின்னர், இந்த ஆராய்ச்சி, பௌத்தம் தமிழ் நாட்டில் வந்ததும், வளர்ந்ததும், மறைந்ததுமான வரலாறுகளையும் சுருக்கமாக எழுதும்படி செய்துவிட்டது. பௌத்தரால் தமிழருக்குண்டான நன்மையை ஆராய்வதே இந்நூலின் முதல் நோக்கமாகையாலும், இது தமிழ் மொழி வரலாற்றின் ஒரு பகுதியாகையாலும், இந்நூலுக்குப் பௌத்தமும் தமிழும் என்னும் பெயர் சூட்டப்பட்டது.
வேறு வேலைகளுக்கிடையே, ஓய்வு நேரத்தில்மட்டும் இதனை ஆராய்ச்சி செய்ய வேண்டியிருந்தபடியினாலும், பல இன்னல்களுக்கிடையே இதனை எழுதவேண்டியிருந்த படியினாலும் யாம் கருதிய அளவு இந்நூல் ஆக்கப்படவில்லை. ஆயினும், எமது ஆற்றலுக்கு இயன்ற வரையில் முயன்று, கிடைக்கக்கூடிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் இயற்றப்பெற்றுள்ளது. தமிழ் நாட்டுப் பௌத்த மத வரலாற்றினைக் கூறுவதும் பௌத்தர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகளை ஒருங்காராய்ந்து விளக்குவதுமான நூல், தமிழ் மொழியில், யாம் அறிந்தவரையில், இதுவே முதலாவதாகும். இதுவரையில் மறைந்து கிடந்தனவும் மாய்ந்து போகுந்தருவாயிலிருந்தனவுமான வரலாறுகளும் செய்திகளும் இவ்வாராய்ச்சியால் உயிர்ப்பிக்கப்பட்டு வெளிப் படுத்தப்படுகின்றன.
இந்த ஆராய்ச்சியைத் தொடங்கிய பின்னர், பாளி என்னும் மாகதி மொழியில் உள்ள பௌத்த நூல்களை நேரே படித்தறிந்தாலன்றித் தமிழ் நாட்டுப் பௌத்த மத வரலாற்றின் ஆராய்ச்சி முற்றுப்பெறாதென்பதை உணர்ந்தோம். ஏனென்றால், பௌத்தரால் போற்றப்படுகின்ற பாளிமொழி நூல்களில் சிலவற்றை இயற்றியவர்களும், பாளிமொழியில் உள்ள நூல்களுக்குச் சிறந்த உரைகளைப் பாளி மொழியில் இயற்றியவர்களும் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த தமிழப் பௌத்தர்களாவர். அன்றியும், தமிழ் நாட்டில் பௌத்தமதம் நிலைபெற்றிருந்த காலங்களில், பாளிமொழி தமிழ் நாட்டுப் பௌத்தர்களின் தெய்வ பாஷை யாக இருந்தது. இக்காரணங்களினால், தமிழ்நாட்டுப் பௌத்தமத ஆராய்ச்சிக்குப் பாளி மொழியறிவு பெரிதும் வேண்டற்பாலது. பாளிமொழியறியாத குறை எமக்குண்டு. ஆயினும், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பாளிமொழி நூல்களினால் இக்குறை ஒருவாறு நீக்கப்பட்டது. சென்னைப் பிரம்பூரில் உள்ள மகாபோதி ஆஸ்ரமத்தைச் சேர்ந்த ஸ்ரீ சத்தர்மாசாரிய சோமாநந்த ஸ்தவிரர் அவர்கள், பாளிமொழி நூல்களில் சில பகுதிகளை மொழி பெயர்த்துச் சொன்னார்கள். இந்த உதவிக்காக எமது நன்றி அவருக்குரியதாகும். ஆயினும், நேர்முகமாகப் பாளி மொழியை அறிந்திருக்கவேண்டுவது தமிழ் நாட்டுப் பௌத்தமத ஆராய்ச்சிக்கு இன்றியமையாததாகும்.
ஆராய்ச்சி செய்வோர் உவத்தல் வெறுத்தல் இன்றி, சான்றுகள் காட்டும் ஆராய்ச்சி முடிவுகளை உள்ளது உள்ளவாறு கூறுதல்வேண்டும்; தமது கொள்கைக்கு முரண்பட்டதாக இருப்பினும், உண்மையையே நடு நின்று கூறுதல் வேண்டும், தமது கொள்கைக்கு முரண்பட்டதாகத் தோன்றுவதாலோ, அல்லது உண்மையைக் கூறினால் உலகம் சீறுமென்னும் அச்சத்தாலோ, உண்மை கூறாமல் விடுவோர் தமக்கும் நாட்டுக்கும் தீங்கு செய்தோராவர். இந்தக் கொள்கையை மனத்திற் கொண்டுதான் யாம் எமது ஆராய்ச்சியிற் கண்ட முடிபுகளை இந்நூலுள் கூறியுள்ளோம். வாசகர் இந்நூலுள் தம் கொள்கைக்கு மாறுபட்ட கருத்தைக் கண்டால், அதன்பொருட்டு எம்மீது சீற்றங்கொள்ளாமல், அது எம் ஆராய்ச்சி காட்டிய முடிபு எனக்கொள்வாராக, எந்த மதத்தையாவது குறைகூறவேண்டுமென்பதோ, அல்லது போற்றவேண்டுமென்பதோ எமது கருத்தன்று. உண்மை யுணரவேண்டும் என்பதொன்றே எம் கருத்து. இந்நூல் எழுதப்பட்டதும் அக்கருத்துடையார்க்கே.
இந்நூலுள் ஒரோவிடங்களில் சில செய்திகள் மீண்டும் கூறப்படும். அவற்றைக் கூறியது கூறல் என்னும் குற்றமாகக் கொள்ளாமல், இது ஆராய்ச்சி நூலாதலின், தௌ¤வு பற்றி அநுவாதமாக அவ்வாறு கூறப்பட்டதெனக் கொள்க. இந்நூலினைத் தமிழுலகம் ஏற்றுக்கொண்டு, இதுபோன்ற தமிழ்த்தொண்டினை மேன்மேலும் இயற்றப் பெரிதும் ஊக்குவிக்கும் எனப் பெரிதும் நம்புகின்றோம்.