Published November 4, 2021 | Version 1
Book Open

கலிங்கத்துப்பரணியும் போர்க்காட்சிகளும் / Kalingathuparanium Porkkatchigalum

  • 1. தலைவர் & இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, வி.எல்.பி.ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரி, கோவை – 641042 / Associate Professor and Head, Department of Tamil, V. L. B Janakiammal College of Arts and Sciences, Kovaipudur, Coimbatore - 641 042.

Description

சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகிய பரணி இலக்கியத்தைப் பற்றியும், பரணி இலக்கியத்தின் முதல் நூலாகிய  கலிங்கத்துப் பரணியில் காணப்படுகின்ற போர் நிகழ்வுகளை  எடுத்துரைப்பதாகவும் இவ்வாய்வு நூல் அமைகிறது. பரணி நட்சத்திரத்தின் சிறப்பையும், காளி தேவிக்கு உரிய பரணி நட்சத்திரத்தில் போர்கள் துவங்குதையும், காளிதேவியைச் சிறப்பிப்பதையும், தலை மாலை அணிதல், பிற உயிர்களைப் பலியிடல், நரபலி போன்றவற்றை ஆய்வதாகவும் இவ்வாய்வு அமைகின்றது. வலிமை பெற்ற மன்னனுக்கு வலிமை இல்லாத மன்னர்கள் பணிந்து திரை செலுத்தி ஆட்சி புரிந்தால் அங்கு சண்டை சச்சரவுகள் உள்நாட்டுக் குழப்பங்கள், கொள்ளையடித்தல் ஆகியவை நடைபெறாது. அப்படியே ஏதேனும் நடைபெற்றாலும் திரை பெறும் மன்னன் படைகளை அனுப்பிக் கலகங்களை அடக்கிக் கொடுப்பான்.  அடங்கித் திரை செலுத்தாத மன்னர்கள் மீது வலிமையான மன்னர்கள் படையெடுத்துச் சென்று அவர்களைத் தோற்கடித்து, அவர்களது கோட்டைகள், நீர்நிலைகள், வீடுகள் போன்றவற்றை அழித்து அந்நாட்டிலுள்ள செல்வங்களைக் கைப்பற்றி, அந்நாட்டை மக்கள் வாழத் தகுதியற்றதாக மாற்றி விடுவார்கள்.

சாளுக்கிய குலத் தோன்றலும், சோழர் குல மகள் வயிற்றுப்  பிள்ளையும், சோழ மன்னனுமாகிய முதலாம் குலோத்துங்கனுக்குப் அடங்கித் திரை செலுத்தாத கலிங்க நாட்டின் மீது தனது படைத் தளபதியாகிய கருணாகரத் தொண்டைமானைப் படையெடுக்கச் செய்து கலிங்க மன்னனைத் தோற்கடித்து அவனைப் பிடித்து வருமாறு ஆணையிட்டான். மன்னனது ஆணைப்படி படையெடுத்துச் சென்று அவனைத் தோற்கடித்து அம்மன்னனது யானைகளையும், குதிரைகளையும், வீரர்களையும், இளம்பெண்களையும் கைப்பற்றி அம்மன்னனது  பெருஞ் செல்வத்தையும் கொள்ளையிட்டு வந்து மன்னனிடம் சமர்ப்பித்ததையும் குறிப்படுகிறது இவ்வாய்வு. கலிங்க மன்னன் அனந்தவர்மன்  சோனகங்கன் தனது அமைச்சர்களது அறிவுரைகளையும், சான்றோர் மற்றும் மக்களது கருத்துக்களையும் ஏற்காது சோழப் படைகளோடு போரிட்டுப் போர்க்களத்தில் தோற்றுத் தானும் தனது படை வீரர்களும் மாற்று உருக்கொண்டு தப்பிச் சென்றதைப் பற்றியும் இவ்வாய்வு எடுத்துரைக்கின்றது.

மன்னர்கள் பெண் கொடுத்தும், பெண் எடுத்தும் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும் திரை செலுத்தாவிடின் அவர்கள் மீது படையெடுப்பர். அக்காலத்தில் பெரும்பாலான மன்னர்கள் தனது அமைச்சர்கள், புலவர்கள், சான்றோர்கள் ஆகியோரது ஆலோசனைகளைப் பெற்று நல்லாட்சி புரிந்துள்ளனர். சில மன்னர்கள் மட்டுமே மற்றவர்களது ஆலோசனைகளைப் பெறாமல் சுயமாக முடிவு எடுத்துள்ளனர். அத்தகைய மன்னர்கள் பிறருக்கு அடங்காமை, போரிடல், அடக்குமுறை, கொடுங்கோலாட்சி, அதிகமான வரி விதிப்பு போன்றவை நிகழ்த்தி ஆட்சி இழப்பு, நாடிழப்பு ஆகியவை நடந்து விடுகின்றன. போரின் முடிவில் போர்க்களத்தில் வீரர்களின் மனைவிகள் தங்கள் கணவர்களைத் தேடுதலும், உறுப்புகள் சிதைந்த நிலையில் காணப்படும் உடலைக் கண்டு அழுதலும், கணவனோடு சேர்ந்து உயிர் துரத்தலும், காண்போரைக் கண்கலங்கச் செய்யும்.

இரத்தத்தில் யானையின் உடல்கள் மிதத்தலைப்  பெரிய கடலில் கப்பல் மிதந்து செல்வதுபோலக் காட்சி அளிப்பதையும், போர்க்களத்தில் கிடக்கும் உடல், கை, கால்கள், தலை,கொழுப்பு, இரத்தம் ஆகியவற்றைக் கொண்டு பேய்கள்  உணவு சமைத்ததையும் கற்பனை பொங்க செயம்கொண்டார் விவரிக்கிறார். தேவர் – அசுரர் போரைக் காட்டிலும், இராமன்- இராவணன் போரைக் காட்டிலும், மகாபாரதப் போரைக் காட்டிலும் இப்போர் புகழ் பெற்றதாக கூறுவதாக இவ்வாய்வு நூல் முடிகிறது.

Files

Cover +Full PDF.pdf

Files (2.5 MB)

Name Size Download all
md5:e3884ee08634c8f1ce9b87d02adf7f78
2.5 MB Preview Download